செய்திகள்

நைல் நதியில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள தமிழக பயணிகளை உடனடியாக மீட்க வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

நைல் நதியில் தடுத்து நிறுத்தப்பட்ட கப்பலில் உள்ள தமிழக பயணிகளை உடனடியாக மீட்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

எகிப்து நாட்டின் லக்ஸர் நகர் அருகே நைல் நதியில் கொரோனா அச்சம் காரணமாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் தவிக்கும் தமிழக பயணிகள் 17 பேரும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். அதுவரை அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

எகிப்தில் சொகுசு கப்பலில் பயணித்து, கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அலெக்ஸான்டிரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சென்னையைச் சேர்ந்த என்ஜினீயருக்கு சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட வேண்டும். கப்பலில் தவிக் கும் தமிழக பயணிகளின் அச்சம் போக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல் டாக்டர் ராமதாஸ் மற்றொரு டுவிட்டர் பதிவில், கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்து செல்போனில் வரும் காலர் டியூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயன் உள்ளது. ஆனால் நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்போன்களை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயன் அளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.