சென்னை,
கொரோனா தொற்று பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. கல்லூரிகளில் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்துவதற்கு முன்பாக கல்லூரிகள் மூடப்பட்டதால், தேர்வுகளின் நிலை என்ன? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.
இதுதொடர்பாக பல்கலைக் கழக மானியக்குழு (யு.ஜி.சி.) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ. சி.டி.இ.) பல்வேறு அறிவுரைகள், பரிந்துரைகளை மாநில அரசுகளுக்கு அளித்து இருக்கிறது. அதற்கேற்றாற்போல், மாநில அரசுகள் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து அறிவித்து வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் பருவத் தேர்வு(செமஸ்டர்) நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தேர்வு நடத்த இயலாதநிலை உள்ளதாக அந்த குழு தன்னுடைய பரிந்துரையை தெரிவித்து இருக்கிறது. எனவே மாணவர் களின் நலன்கருதி, பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கும், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கும், முதுகலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோல், இளநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம், 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், எம்.சி.ஏ. முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இவர்கள் அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல அனுமதிக் கவும், இதுகுறித்து விரிவான ஒரு அரசாணையை உயர்கல்வித்துறை வெளியிடவும் உத்தரவிட்டு உள்ளேன்.
இவ்வாறு அதில் முதல்- அமைச்சர் கூறி உள்ளார்.
கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தவிர, மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை.
இதனால், இறுதி செமஸ்டர் தேர்வில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வாவிடம் கேட்டபோது, இறுதி செமஸ்டர் தேர்வு தொடர்பாக முதல்-அமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். எனவே இதுகுறித்த முடிவை முதல்-அமைச்சர் அறிவிப்பார் என்று பதில் அளித்தார்.