செய்திகள்

நெல்லை பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்கிய சிறுமி காயம்

நெல்லை பேட்டையில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்கிய சிறுமி காயம் அடைந்தார்.

பேட்டை,

நெல்லை டவுனை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகன், மகளை அழைத்துக் கொண்டு நேற்று திருச்செந்தூர் புறப்பட்டார். இதற்காக நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அங்கு ஒரு பிளாட்பாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பாசஞ்சர் ரெயிலில் ஏறினார்.

அந்த ரெயில் காலை 7 மணிக்கு புறப்பட்டு சிறிது தூரம் சென்ற பிறகு செங்கோட்டை செல்லும் தண்டவாளத்தில் ஓடியது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினருக்கு, அப்போதுதான் தாங்கள் திருச்செந்தூர் செல்லும் 7.10 மணி ரெயிலில் ஏறுவதற்கு பதில் செங்கோட்டை செல்லும் ரெயிலில் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ரெயிலை விட்டு கீழே இறங்கிவிட முடிவு செய்தனர்.

அதற்குள் அந்த ரெயில் 7.10 மணிக்கு பேட்டை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதனால் பதற்றத்தில் இருந்த அந்த குடும்பத்தினர் ரெயில் பெட்டியின் வாசல் அருகே வந்து நின்றனர். ரெயில் மெதுவாக நிற்பதற்காக பிளாட்பாரத்தை ஒட்டி சென்றது. அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் 16 வயது மகள் ரெயிலில் இருந்து கீழே இறங்கினார்.

இதில் நிலை தடுமாறிய அந்த சிறுமி பிளாட்பாரத்தில் விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டனர். இதனால் ரெயில் 10 நிமிடங்கள் நின்று சென்றது. இதைத்தொடர்ந்து அந்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மெயின் ரோட்டுக்கு சென்று பஸ்சில் ஏறி சென்று விட்டனர். இந்த சம்பவம் பேட்டை ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் வழியாக ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் 1, 2 மற்றும் 3-வது பிளாட்பாரங்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வந்து செல்ல பயன்படுத்தப்படுகிறது. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் மட்டுமே பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகிறது. காலை நேரத்தில் நெல்லையில் இருந்து செங்கோட்டை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில், மயிலாடுதுறை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு பாசஞ்சர் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில்கள் 2 பிளாட்பாரத்திலும் உள்ள தண்டவாளங்களில் முன்னும், பின்னும் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும். இதனால் காலை நேரத்தில் பாசஞ்சர் ரெயில்களில் பயணம் செய்ய வரும் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். நேற்றும் இதே போல் அந்த குடும்பத்தினர் திருச்செந்தூர் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக செங்கோட்டை ரெயிலில் ஏறிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே பயணிகள் பெயர் பலகைகளை சரியாக பார்த்து ஏற வேண்டும். ரெயில் நிலையத்திலும் காலை நேரத்தில் இந்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில் பாசஞ்சர் ரெயில்கள் நிற்கும் பிளாட்பாரம் மற்றும் நிறுத்தப்பட்டிருக்கும் பகுதி ஆகியவை குறித்து தொடர் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.