பீஜிங்,
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. உலகில் இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 4,011 பேர் பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது.
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் இறந்துள்ளதாகவும், 19 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை 3,136 ஆக உயர்ந்துள்ளது. 17,721 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 59,897 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பின்னர் முதல் முறையாக சீன அதிபர் ஜின்பிங் நேற்று ஹுபெய் மாகாணத்தையும், அதன் தலைநகரான உகான் நகரையும் பார்வையிட்டார். வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னின்று போராடும் மருத்துவ ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், சமூகநல ஊழியர்கள், போலீசார், அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார். நோயாளிகள் மற்றும் குடியிருப்புவாசிகளையும் அவர் நலம் விசாரித்தார்.
கனடாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முதலாவதாக ஒருவர் இறந்துள்ளார். வடக்கு வான்கோவர் நகரில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் இந்த வைரஸ் தாக்குதலுடன் வசித்து வந்த ஒருவர் இறந்துவிட்டதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். அவரது பெயர், வயது ஆகிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர். அங்கு 70 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளது.
ஜெர்மனியில் முதல் முறையாக 2 பேர் இறந்துள்ளனர். எஸ்ஸென் பகுதியை சேர்ந்த 89 வயது மூதாட்டியும், ஹெய்ன்ஸ்பெர்க் மாவட்டத்தை சேர்ந்த 78 வயது முதியவரும் பலியாகி உள்ளனர். அங்கு 1,112 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளது. தென்கொரியாவில் பலி எண்ணிக்கை 54 ஆகவும், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7,513 ஆகவும் உயர்ந்துள்ளது.
மங்கோலியாவில் முதல் முறையாக ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே அங்கு சீன எல்லை மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தலைநகர் உலான்பாடர் நகரில் மாஸ்கோவில் இருந்து திரும்பிய ஒரு மின்சார நிறுவன ஊழியருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து உலான்பாடர் மற்றும் புறநகரங்களில் வசிப்பவர்கள் 6 நாட்களுக்கு வெளியேறக்கூடாது என்றும், வெளியில் இருந்தும் யாரும் நுழையக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இஸ்ரேலுக்கு வரும் அனைவரும் 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹு அறிவித்துள்ளார். இது கடினமான முடிவுதான், ஆனால் மக்களின் சுகாதாரத்தை பராமரிக்க இது அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.