செய்திகள்

மதுரவாயலில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

மதுரவாயலில் தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் கூரியர் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பூந்தமல்லி,

நெல்லை மாவட்டம் தென்காசி தாலுகா செட்டியூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 24). இவர், சென்னையில் தங்கி தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் கார்த்திக் நகர் அருகே வந்தபோது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அந்த தண்ணீர் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் தினேஷ்குமார், சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பலியான தினேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீர் லாரி டிரைவர் குமார்(32) என்பவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT