மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் வட்டம் கொளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளம்பாக்கம், தேண்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் பள்ளம்பாக்கம் கிராமத்தில் 20 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருக்கும் நீர்த்தேக்க தொட்டியை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும், பள்ளம்பாக்கம், தேன்பாக்கம் கிராமங்களில் தற்போது உள்ள குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும், பழுதடைந்துள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் நிர்வாகி டி.சுதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் எஸ்.ரவி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கோவிந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி வெள்ளி கண்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் பேசினார்.
வட்டார வளர்ச்சி செயற்பொறியாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இன்னும் 2 நாட்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.