அபராத ரசீதின் நகல் 
தேசிய செய்திகள்

அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 1 கி.மீ. அதிகம்: கடலில் கார் ஓட்டியதாக ரூ. 2,000 அபராதம் விதித்த போலீஸ்!

போக்குவரத்து கேமரா பதிவு செய்த ஜிபிஎஸ் தரவுகளில், விதிமீறல் நடந்த இடம் 0°N, 0°E எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா விரைவுச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை விட வெறும் 1 கி.மீ. அதிகமாகச் சென்றதற்காக வாகன ஓட்டி ஒருவருக்கு ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் நடந்த இடம் அட்லாண்டிக் பெருங்கடலின் நடுப்பகுதி எனப் பதிவாகியிருப்பது இணையத்தில் பெரும் சிரிப்பலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 1 கி.மீ. வேகத்திற்கு அபராதம்

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவையும் ஆக்ராவையும் இணைக்கும் யமுனா விரைவுச்சாலையில், இலகுரக வாகனங்களுக்கு மணிக்கு 100 கி.மீ. வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனுஜீத் சிவம் என்பவர் தனது மஹிந்திரா தார் வாகனத்தை மணிக்கு 101 கி.மீ. வேகத்தில் இயக்கியதாகக் கூறி நொய்டா போக்குவரத்து போலீசார் ரூ. 2,000 மின்னணு அபராதச் சீட்டு (e-challan) அனுப்பியுள்ளனர்.

அட்லாண்டிக் கடலில் கார் ஓட்டிய அதிசயம்

அபராத ரசீதைப் பார்த்த அனுஜீத் சிவத்திற்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போக்குவரத்து கேமரா பதிவு செய்த ஜிபிஎஸ் தரவுகளில், விதிமீறல் நடந்த இடம் 0°N, 0°E எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. புவியியல் ரீதியாக இந்த புள்ளி மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கு அப்பால், அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவைக் குறிக்கிறது. தொழில்நுட்ப வல்லுநர்கள் இதனை 'நல் ஐலேண்ட்' என அழைக்கின்றனர்.

போலீசாருக்கு கேள்வி

இது குறித்து கடந்த 12-ம் தேதி தனது எக்ஸ் தளத்தில் அபராத ரசீதின் நகலைப் பகிர்ந்த அனுஜீத் சிவம், உத்தரப்பிரதேச மற்றும் நொய்டா போக்குவரத்து போலீசாரை டேக் செய்திருந்தார். அதில், "100 கி.மீ. வேக வரம்பு கொண்ட சாலையில் 101 கி.மீ. வேகத்தில் சென்றதற்கு ரூ. 2,000 அபராதமா? அதுவும் அட்லாண்டிக் பெருங்கடலில் கார் ஓட்டியதாக இடம் காட்டுகிறது. சாலைப் பாதுகாப்பு இப்படித்தான் செயல்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொழில்நுட்பக் கோளாறும் போலீஸ் விளக்கமும்

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் மற்றும் ரேடார் கருவிகளில் ஜிபிஎஸ் சிக்னல் துண்டிக்கப்படும்போது அல்லது மென்பொருள் கோளாறு ஏற்படும்போது, அவை இயல்பாகவே 0°N, 0°E என்ற ஆயத்தொலைவுகளைப் பதிவு செய்துவிடுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பதிவு வைரலானதைத் தொடர்ந்து பதிலளித்த நொய்டா போக்குவரத்து போலீசார், இது குறித்து புகாரளிக்க இ-சலான் உதவி எண்ணான 7065060882- ஐத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT