தேசிய செய்திகள்

ரியாத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்

அஸ்லாம் என்பவர் சுமார் ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளை ரியாத்திலிருந்து தனது மாநிலமான கேரளத்திற்கு கடத்தி வந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

ரியாத்தில் இருந்து விமானத்தில் கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 10 தங்க பிஸ்கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தல்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துளசிசேரி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம். இவர் சுமார் ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளை ரியாத்திலிருந்து தனது ஊரான கேரளத்திற்கு கடத்த திட்டமிட்டார்.

அதன்படி அவசர காலத்திற்கு பயன்படுத்தப்படும் எமர்ஜென்சி லைட்டின் பேட்டரியில் 10 தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்துள்ளார். பின்னர் ரியாத்திலிருந்து தனது ஊரான துளசிசேரிக்கு புறப்பட்டார்.

கைது

மலப்புரம் மாவட்டம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர் சுங்கத்துறை சோதனையில் தப்பினார். ஆனால், விமான நிலையத்திற்கு வெளியே வந்த அவரிடம் போலீசார் சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தினர். சோதனையில் அஸ்லாம் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ எடையுள்ள 10 தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தங்கக் கடத்தலில் அஸ்லாம் ஒரு குருவியாக செயல்பட்டிருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

கடத்தல் முயற்சிக்கு பின்னணியில் உள்ள கும்பலைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக, விமான நிலையத்திற்கு வெளியே அதிக அளவிலான கடத்தல் தங்கம் பிடிபட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT