கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கேரளாவில் 2 வாரங்களில் பாம்புக்கடிக்கு 10 பேர் உயிரிழப்பு

கேரளாவில் கடந்த 2 வாரங்களில் பதிவான பாம்புக்கடி மரணங்களின் எண்ணிக்கை 3 குழந்தைகள் உள்பட 10 ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளம் மாநிலம் இயற்கை அழகு சூழ்ந்து காணப்படுவதால் 'கடவுளின் தேசம்' என அழைக்கப்படுகிறது. அதே சமயம் இந்தியாவில் மேற்கு வங்காளத்துக்கு அடுத்து விஷ பாம்புகள் அதிகம் இருக்கும் மாநிலங்களில் 2-வது இடத்தில் கேரளம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 12 ஆயிரம் மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

கேரளம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கேரளாவின் பல மாவட்டங்களில் கடுமையான கோடை வெப்பம் காரணமாக நிழல், குளிர்ச்சியான சூழல் மற்றும் இரைகளை தேடி பாம்புகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

திருவனந்தபுரத்தில் பாம்புக்கடியால் சிகிச்சை பெற்று வந்த 64 வயது முதியவர் நேற்று மருத்துமனையில் உயிரிழந்தார். பார்வை குறைபாடு கொண்டவரான அவர் இரவு உணவு சாப்பிட்ட பிறகு வீட்டை விட்டு வெளியே வந்தபோது பாம்பு கடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கேரளாவில் கடந்த 2 வாரங்களில் திருவனந்தபுரம், ஆலப்புழா, திருச்சூர், காசர்கோடு, இடுக்கி, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பதிவான பாம்புக்கடி மரணங்களின் எண்ணிக்கை 3 குழந்தைகள் உள்பட 10 ஆக உயர்ந்துள்ளது. பாம்புக்கடியால் பலரும் மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.