தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போலி பாக்கு பறிமுதல்: டிரைவர் கைது

இதில் பூசப்பட்டுள்ள செயற்கை வண்ணங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு கடும் கேடு விளைவிக்கக்கூடியவை.

கோலார் தங்கவயல்,

கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வர்ணம் பூசப்பட்ட 10 டன் போலி பாக்கு மூட்டைகளை போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போலி பாக்குகள்

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா, நங்கலி போலீஸ் எல்லைக்குட்பட்ட சுங்கச்சாவடி வழியாக கொல்கத்தாவில் இருந்து பெங்களூருவுக்கு ஆபத்தான ரசாயன வர்ணம் பூசப்பட்ட போலி பாக்குகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கும், தாலுகா சுகாதாரத்துறை அதிகாரி சுகுனாவுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து நங்கலி சுங்கச்சாவடி அருகே போலீசாரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த ஒரு சரக்கு லாரியை மறித்து சோதனை செய்தனர்.

பறிமுதல்

அந்த சோதனையில், லாரியில் ஆபத்தான ரசாயன வர்ணம் பூசப்பட்ட 3 விதமான போலி பாக்கு மூட்டைகள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 டன் போலி பாக்கு மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தாலுகா சுகாதாரத்துறை அதிகாரி சுகுனா கூறியதாவது:-

கொல்கத்தாவில் இருந்து பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் விற்பனை செய்வதற்காக இந்த போலி பாக்குகள் கடத்தி வரப்பட்டுள்ளது. இதில் பூசப்பட்டுள்ள செயற்கை வண்ணங்கள் மனித உடல் ஆரோக்கியத்திற்கு கடும் கேடு விளைவிக்கக்கூடியவை.

பறிமுதல் செய்யப்பட்ட பாக்கு மாதிரிகள் ரசாயன பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்ததும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT