புதுடெல்லி
காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கி அரசியலுக்காக வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோத குடியேறிகளை அனுமதித்தனர் என பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே கடும் குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.
இதன்படி, நாட்டில் வங்காளதேச ஊடுருவல்காரர்கள் 10 கோடி பேர் உள்ளனர் என்றும் இவை அனைத்துக்கும் பின்னணியில் காங்கிரஸ் கட்சியே உள்ளது என்றும் கூறினார். 1972-ம் ஆண்டு இந்தியா-வங்காளதேசம் இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி குறிப்பிட்டு பேசிய அவர், இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒரு சமரசத்திற்கானது என கூறினார்.
பீகார், ஜார்கண்ட், வங்காளம், அசாம், திரிபுரா மாநில மக்கள் மட்டுமின்றி மும்பை, டெல்லி மற்றும் குஜராத் மக்கள் கூட வங்காளதேச ஊடுருவல்காரர்களால் ஆழ்ந்த கவலையில் உள்ளனர். ஏறக்குறைய 5 முதல் 8 கோடி வரை, ஏன் 10 கோடி வங்காளதேச நாட்டினர் கூட இந்தியாவுக்குள் வந்திருக்க கூடும்.
சந்தல் பர்கானாவில் 45 சதவீதம் என இருந்த நம் பழங்குடியின மக்கள் 24 சதவீதம் அளவுக்கு குறைந்து விட்டனர். 9 சதவீதம் இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 25 முதல் 26 சதவீதம் என ஆகி விட்டது என கூறினார். 1972 மார்ச் 19-ந்தேதி இந்திரா காந்தியும், ஷேக் முஜிபுர் ரகுமானும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதனால், வங்காளதேச ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் வர சுதந்திரம் கொடுக்கப்பட்டது.
முஸ்லிம்கள் உள்ளே வந்து விட்டால், அது காங்கிரசுக்கான வாக்கு வங்கியாக இருக்கும். இதனை பதிவாக நான் வெளியிட்டபோது கடும் எதிர்ப்புகள் வந்தன என்று கூறினார். ஒட்டுமொத்த அளவில் வங்காளதேச ஊடுருவல்காரர்களால் நாடு பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நாட்டில் சட்டவிரோத குடியேறிகள் நீக்கப்படுவார்கள் என பிரதமரும், உள்துறை மந்திரியும் உறுதிமொழி எடுத்துள்ளனர் என கூறினார்.