தேசிய செய்திகள்

1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியீடு? - மத்திய அரசு விளக்கம்

1,000 ரூபாய் நோட்டுகளை புதுவடிவில் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

புதுடெல்லி,

1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் 15-ந்தேதி வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

1,000 ரூபாய் நோட்டு

இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயம் முதல் அதிகபட்சமாக ரூ.500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வரை புழக்கத்தில் உள்ளன. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மக்களின் கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த ரூ.1,000 நோட்டுகளை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய திரும்பப் பெற்றது. இந்த சூழலில் 1,000 ரூபாய் நோட்டுகளை புதுவடிவில் ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அதில், அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி முதல் அந்த ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ள மஞ்சள் நிறத்திலான அந்த ரூபாய் நோட்டுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சிலர் அந்த ரூபாய் நோட்டுகளை கைகளில் வைத்திருப்பது போன்று புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றனர்.

மத்திய அரசு மறுப்பு

இந்த நிலையில், 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியாக உள்ளதாக பரவும் தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பொய்யானது. அதுபோல, 1,000 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை. அரசு தரப்பில் இருந்து வெளியாகும் அதிகாரபூர்வ தகவலை மட்டுமே நம்பவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 ஆகிய 6 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT