இளஞ்சிவப்பு நிற போதைப்பொருள் 
தேசிய செய்திகள்

ஐரோப்பாவிலிருந்து டெல்லிக்கு தபாலில் வந்த 10.8 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

அட்டைப்பெட்டியின் நான்கு பக்கங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 பொட்டலங்களில் இளஞ்சிவப்பு நிற பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஐரோப்பிய நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த தபால் பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.8 கிலோ ஆம்பெட்டமைன் போதைப்பொருளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:-

ரகசிய தகவல்

குறிப்பிட்ட ரகசிய தகவலின் அடிப்படையில், புதுடெல்லி வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் சந்தேகத்திற்குரிய பார்சலை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் துணிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆரம்ப சோதனையில் சாதாரண ஆடைகள் மட்டுமே இருந்தன.

இளஞ்சிவப்பு நிற பொடி

ஆனால் தொடர்ந்து நடத்திய தீவிர சோதனையில் அட்டைப்பெட்டியின் நான்கு பக்கங்களிலும் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8 பொட்டலங்களில் இளஞ்சிவப்பு நிற பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆம்பெட்டமைன் போதைப்பொருள்

சோதனையில் அது ஆம்பெட்டமைன் போதைப்பொருள் என்பது உறுதியானது. 1985-ம் ஆண்டு போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் அனைத்து பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தபால் வர்த்தகத்தை பயன்படுத்தி போதைப்பொருள் கடத்த முயன்ற கும்பலின் பின்னணி குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT