தேசிய செய்திகள்

மரம் அறுக்கும் இயந்திரத்தால் 10ம் வகுப்பு மாணவி மீது கொடூர தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்

காதல் விவகாரத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தெரிய வந்துள்ளது.

திருப்பதி,

10ம் வகுப்பு மாணவி மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

வகுப்பறைக்குள் புகுந்த வாலிபர்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று வழக்கமான முறையில் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது 22 வயது வாலிபர் ஒருவர் மரம் அறுக்க பயன்படுத்தப்படும் இயந்திரத்தை கொண்டு பள்ளிக்குள் நுழைந்தர். 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் புகுந்த அந்த வாலிபர், அங்கிருந்த கோபிகா என்ற மாணவியை தான் கொண்டு வந்த மரம் அறுக்கும் இயந்திரத்தால் கொடூரமான முறையில் தாக்கத் தொடங்கினார்.

மரம் அறுக்கும் இயந்திரத்தால்..

இதனை சற்றும் எதிர்பாராத சக மாணவர்கள், என்ன செய்வதென்று தெரியாமல் பதறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். கோபிகாவின் தோழி ஒருவர், அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த வாலிபர், காப்பாற்ற சென்ற மாணவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதன் பின்னர் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில்

இந்த கொலைவெறித் தாக்குதலில் கோபிகாவின் முகம், தலை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. காப்பாற்ற சென்ற தோழிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு கோபிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் விவகாரத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர். வாலிபர் ஒருவர் பட்டப்பகலில் வகுப்பறைக்குள் புகுந்து, 10ம் வகுப்பு மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT