தேசிய செய்திகள்

3 மசோதாக்கள் மீது 12 மணி நேரம் விவாதம் - நாளை மாலை வாக்கெடுப்பு

மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

3 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கி உள்ளது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசித்த பிறகு, அலுவல்கள் தொடங்கியது. இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

முன்னதாக, இந்த மசோதாக்களை அறிமுகம் செய்வது மீதான வாக்கெடுப்பை, குரல் வாக்கெடுப்பாக நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து டிவிஷன் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார். இதையடுத்து, நடைபெற்ற டிவிஷன் வாக்கெடுப்பில் மொத்தம் 333 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். அதில் ஆதரவாக 207 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர்.

பகுதிவாரி வாக்கெடுப்பில் மக்களவையில் மொத்தம் 543 எம்.பிக்களில் 333 எம்.பி.க்கள் பட்டன் மூலமாக வாக்களித்துள்ளனர். மசோதாக்களை அறிமுகம் செய்ய தேவையான எம்.பிக்கள் ஆதரவு கிடைத்ததையடுத்து, மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்களை இணைத்து அறிமுகம் செய்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டத்திருத்தம், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீது மக்களவையில் 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரிண் ரிஜுஜூ அறிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் விவாத நேரம் நீட்டிக்கப்படும் என்றும் திருத்தச் சட்டம் தவிர மற்ற 2 மசோதாக்களை ஒன்றாக விவாதிக்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மசோதாக்கள் மீது நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் எந்தவொரு சந்தேகத்திற்கும் பதிலளிக்க தயார் என்றும் மசோதாவை எந்த காரணமும் இல்லாமல் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டினார்.

எந்த விதிமீறலும் இல்லாமல் எம்.பி.க்கள் தங்கள் கருத்துகளை கூற வேண்டும், மசோதா தவிர வேறு எதைப்பற்றியும் பேசக்கூடாது என்றும் ஒவ்வொரு கட்சி எம்.பி.க்களுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்கப்படுகிறதோ அவ்வளவு நேரத்திற்குட்பட்டு தான் பேச வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.