ஷிவ்புரி,
மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டத்தில் சுல்தான்கர் நீர்வீழ்ச்சி உள்ளது. விடுமுறை நாளான நேற்று முன்தினம் இந்த அருவிக்கு நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதில் ஏராளமானோர் அருவியில் குளித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அங்கு மிகப்பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் அடித்துச்செல்லப்பட்டனர். இதில் சிலர் அங்கிருந்த பாறைகளில் ஏறி உதவிகேட்டு கூச்சலிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கு குறித்த தகவல் அறிந்ததும் அங்கு வந்த ராணுவம், இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், ஊர்க்காவல் படை மற்றும் மாநில போலீசார் இணைந்து உள்ளூர்வாசிகள் உதவியுடன் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். அவர்கள் சுமார் 10 மணி நேரம் கடுமையாக போராடி, பாறைகளில் தஞ்சமடைந்திருந்த 45 பேரை மீட்டனர். இதில் 6 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
அருவியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் மேலும் 12 பேர் அடித்துச்செல்லப்பட்டு உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடக்கிறது.