லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள குலாரியா கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு 9 மாத பெண் குழந்தை ஒன்று காணாமல் போனது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை நள்ளிரவில் காணாமல் போனதால், குழந்தையின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.
நள்ளிரவு நேரத்தில் கிராம மக்கள் சேர்ந்து அருகில் உள்ள வயல்வெளிகள் உள்பட பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர். இந்நிலையில், நேற்று காலை வயல்வெளியில் உள்ள ஒரு தகர கொட்டகையில், உடலில் ரத்த காயங்களுடன் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், குழந்தையின் குடும்ப உறுப்பினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த சிறுவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அந்த சிறுவன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டான். சம்பவத்தன்று நன்றாக மது அருந்தியத சிறுவன், பின்னர் மொபைலில் ஆபாச படம் பார்த்துள்ளான். அதன் பிறகு வீட்டிற்குச் சென்று, தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
காவல்துறை அதிகாரிகள் சிறுவனின் மொபைல் போனை ஆய்வு செய்தபோது, அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களை சிறுவன் பார்த்துள்ளான் என்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.