கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
மேற்கு வங்காள மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 3-ந்தேதி முதல் காணாமல் போனார். இதையடுத்து, உறவினர்கள் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், 2 நாட்களுக்குப் பிறகு அங்குள்ள ஆற்றின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிறுமி பிணமாக கிடந்தார். அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக சிறுமியின் உறவினரான திலீப் ராய் மீது சந்தேகம் எழுந்தது. அவர் தனது சகோதரி மகளான சிறுமியை ஆற்றைக் காட்டுவதாகக் கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கிடையே, போலீசார் தன்னை தேடுவதை அறிந்த திலீப் ராய் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சொந்த கிராமமான ராய்கஞ்சில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது திலீப் ராய் திடீரென துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் போலீஸ் வாகனத்தின் டயரில் குண்டு பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு காயமடைந்த திலீப் ராயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார். மேற்கு வங்காளத்தில் கடந்த மே மாதம் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற 4-வது என்கவுண்டர் இதுவாகும்.
கடந்த ஜூலை மாதம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாருய்பூரில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபாஸ் மொண்டல் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
அதேபோல், கடந்த அக்டோபர் 27-ந் தேதி வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாட்டாவில் 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகலாத் தாஸ் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். மேலும், முர்ஷிதாபாத் மாவட்டம் சம்சேர்கஞ்சில் பா.ஜ.க. தொண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சமவுல் ஹக் என்பவரும் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த திலீப் ராயும் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.