ராயவரம்
தெலுங்கானாவின் ஜெகதியால் நகரில் இருந்து, ஆந்திர பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காளிகிரி நோக்கி 35 பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பஸ், மர்காபுரம் மாவட்டத்தில் ராயவரம் அருகே சென்றபோது, டீசல் ஏற்றி சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. அதன் முன்பகுதி, மோதிய வேகத்தில் முற்றிலும் உருக்குலைந்து போனது. லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 22 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் பற்றி அறிந்த ஆந்திர பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்து உள்ளார்.
தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்து இருக்கிறார். சம்பவம் பற்றி அறிந்ததும், ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், ஆந்திர பிரதேசத்தின் மர்காபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட பஸ் விபத்து பற்றி அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி கொள்கிறேன் என்று பதிவிட்டு உள்ளார்.
இந்த விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.