தேசிய செய்திகள்

நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்ற 13 பேர் கைது: 9 துப்பாக்கிகள், 48 தோட்டாக்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரிக்க தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் நிதி உதவியை செய்த மாரியப்பா நாயக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி,

கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் நாட்டு துப்பாக்கிகளை சிலர் சட்ட விரோதமாக தயாரித்து விற்று வருவதாகவும், அதை சமூக விரோதிகள் வாங்கி குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

இந்த நிலையில் பெலகாவி மாவட்டம் கானாப்பூர் தாலுகா கட்காளி கிராமத்தில் சிலர் சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்று வருவதாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார். அதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மாருதி ஸ்ரீகாந்த் சுதார் என்பவர் தனது வீட்டில் வைத்து நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்றது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக வாங்கிய மார்க்கண்டே நகர் பகுதியைச் சேர்ந்த சோம்நாத் சவுகுலே, சந்தோஷ் நாயக், மாருதி குதத்யாகோல், பாலு நாயக், லட்சுமண் குஜ்னால், முடிகொப்பா பகுதியைச் சேர்ந்த பசவராஜ் சாலோடகி, பசவந்த் யர்மால்கர், லட்சுமண் குராவ் ஆகியோரையும், மாருதி ஸ்ரீகாந்த் சுதார் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரிக்க தேவையான ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் நிதி உதவியை செய்த மாரியப்பா நாயக் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

துப்பாக்கி விற்பனை கடை

அதுபோல் போலீசார் உத்தரகன்னடா மாவட்டம் ஜோய்டா தாலுகா ராம்நகராவில் பதுங்கி இருந்த விஸ்வநாத், சந்தோஷ் தேசாய் மற்றும் பெலகாவி கொண்டாலி கள்ளி கிராமத்தில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை கடை நடத்தி வந்த விஜய் அங்கோல்கர் ஆகியோரையும் கைது செய்தனர். இதில் விஜய் அங்கோல்கர் பெலகாவி டவுன் கஞ்சார்கள்ளி பகுதியில் ‘அவிஸ் கன்ஷாப்’ என்ற பெயரில் துப்பாக்கி விற்க உரிமம் பெற்று கடை நடத்தி வந்தார். அந்த உரிமம் கடந்த 2021-ம் ஆண்டு காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக அதை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைப்பு

இவ்வாறு கைதான 13 பேரிடம் இருந்து 9 நாட்டு துப்பாக்கிகள், 48 தோட்டாக்கள், 34 பாக்கெட் வெடி மருந்துகள், 869 துப்பாக்கி தயாரிக்க தேவைப்படும் சிறு கருவிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கானாப்பூர் போலீசார் கைதான 13 பேர் மீது வழக்குப்பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.