இந்தூர்,
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 13 வயது சிறுமியை 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக மணமகன் உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தந்தை இறந்த பிறகு அவரது தாய் மறுமணம் செய்துகொண்டார். இதனால் சிறுமி தனது உடன்பிறப்புகளுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சிறுமியை, 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைக்க தாத்தா முயற்சி செய்துள்ளார். மணமகனின் தந்தை சிறுமியின் தாத்தாவிடம் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அதாவது 13 வயது சிறுமியை, தனது 42 வயது மகனுக்குத் திருமணம் செய்து வைத்தால் மட்டுமே, தன் மகளை தாத்தாவின் பேரனுக்குத் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு சிறுமியின் தாத்தா சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி சிறுமிக்கு திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் அமைக்கப்பட்ட பறக்கும் படை, குழந்தைத் திருமணத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக இரண்டு குடும்பங்களையும் எச்சரித்தனர்.
இதையடுத்து அதிகாரிகளுக்கு தெரியாமல், ஏப்ரல் 26-ம்தேதி இரவு சிறுமியை இந்தூரிலிருந்து உஜ்ஜைனுக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு கோவிலில் 42 வயது நபருக்கு திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மீண்டும் சிறுமி தாத்தா, பாட்டி வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, மாமியார் வீட்டிற்குச் செல்லுமாறு சிறுமியை வற்புறுத்தி தாக்கியுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் கீழ், மணமகன், அவரது உறவினர்கள் மற்றும் சிறுமியின் தாத்தா, பாட்டி உள்ளிட்ட 13 பேர் மீது நேற்று போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர்.