தேசிய செய்திகள்

வர்த்தக வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த 15 நாள் அவகாசம் - மத்திய அரசு

ஜி.பி.எஸ் இணைக்காமல் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே அதிகாரிகளால் முடக்கப்பட்டன.

புதுடெல்லி,

அனைத்து பொது மற்றும் வர்த்தக வாகனங்களில் ஜி.பி.எஸ். எனப்படும் வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம் (ஏ.ஐ.எஸ். 140 வி.எல்.டி.டி.) பொருத்தப்பட வேண்டும் என்றும், அந்த வாகனங்கள்தான் மாநிலங்களை கடந்து செல்ல முடியும் என மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகம் ஒரு உத்தரவில் தெளிவாக தெரிவித்தது. இந்த உத்தரவு பல மாநிலங்களிலும் நடைமுறைக்கு வந்து விட்டது. ஆனால் தமிழ்நாட்டில் சில காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற ஆயிரக்கணக்கான லாரிகள் ஆங்காங்கே அதிகாரிகளால் முடக்கப்பட்டன. இதனால் டிரைவர்களும், உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டனர். அங்கிருந்தே அவர்கள் சமூக வலைத்தளங்களில் கோரிக்கையும் விடுத்தனர்.

15 நாள் கால அவகாசம்

இதனைத்தொடர்ந்து சில அமைப்புகள் கருவிகளை பொருத்துவதற்கு கூடுதலாக கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டன. இதன் அடிப்படையில் மத்திய அரசு. தமிழ்நாட்டுக்கு மட்டும் 15 நாள் கால அவகாசம் அளித்து இருப்பதாக இ-வாகன சேவை அமைப்பின் தலைவர் கணேஷ்குமார் தெரிவித்தார். அந்த வர்த்தக வாகனங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் கருவியை பொருத்திக்கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதியை ஆன்லைனில் பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.