தேசிய செய்திகள்

கேரளாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 150 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொயிலாடி பகுதியில் அரசு உதவி பெறும் ஒரு பள்ளி இயங்கி வருகிறது. இங்கு படித்து வரும் மாணவர்கள் பலருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள சில ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தற்போதைய நிலையில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நிலை பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.

பத்தேரி தாலுகா ஆஸ்பத்திரியில் ஒரு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஒரு ஆசிரியருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் கவலைக்கிடமான நிலை இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை விடப்பட்டது.

அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்தனர். 'மாணவர்களின் பாதிப்புக்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உணவு, நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பின்னர்தான் காரணம் தெரியவரும்' என அவர்கள் கூறி உள்ளனர்.