தேசிய செய்திகள்

டெல்லியில் 2-வது நாளாக 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடல்

ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் வழக்கம்போல இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

2-வது நாளாக

தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் கல்வீச்சு போன்ற சம்பவங்களால் டெல்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் 16 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் மெட்ரோ நிலையங்களில் வழக்கம்போல இன்டர்சேஞ்ச் வசதி மட்டும் தொடர்ந்து கிடைக்கும் என்று டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் டெல்லி மெட்ரோ வெளியிட்ட பதிவில், "லோக் கல்யாண் மார்க், ராஜீவ் சவுக், பட்டேல் சவுக், ராமகிருஷ்ணா ஆசிரம் மார்க், பராகம்பா ரோடு, உச்சநீதிமன்றம், சேவா தீர்த், ஜன்பத், மண்டி ஹவுஸ், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ஐ.டி.ஓ., டெல்லி கேட், இந்திரபிரஸ்தா, கான் மார்க்கெட், ஜோர் பாக் மற்றும் சிவாஜி ஸ்டேடியம் ஆகிய மெட்ரோ நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.