புதுடெல்லி,
ஓடும் பேருந்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 2 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 3-ந்தேதி அன்று குடும்பத்தினருடன் சண்டையிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர், நொய்டா செக்டர்-63 பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். மெயின்புரில் இருந்து பேருந்தில் சென்ற சிறுமி தான் சேர வேண்டிய இடம் வந்துவிட்டது என தவறுதலாக புரிந்து நொய்டாவின் பாரி சவுக் பகுதியில் இறங்கி விட்டார். இறங்கிய பிறகு தான் உறவினர் வீடு வெகு தொலைவில் உள்ளதை உணர்ந்தார்.
அப்போது அந்த வழியே ஒரு ஸ்லீப்பர் பேருந்து வந்தது. மழையினால் தவித்து கொண்டிருந்த அவர் அந்த பேருந்தை மறித்து உதவி கேட்டுள்ளார். சிறுமி செல்ல வேண்டிய இடத்தை கூறியபோது அதிலிருந்த டிரைவர் குல்தீப் மற்றும் கண்டக்டர் சந்தீப் நொய்டா செக்டர்-63 பகுதிக்கு தான் செல்வதாக கூறி பேருந்தில் ஏற்றி சென்றனர். பேருந்து பழுது பார்ப்பதற்காக சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டதால் பேருந்தில் யாருமில்லை. ஸ்லீப்பர் பேருந்து என்பதால் அதன் ஜன்னல்கள் துணிகளால் மூடப்பட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திய கண்டக்டர் சந்தீப் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார். பின்னர், டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவருமே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெளியில் கூறினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
அவர் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விடாமல் ஏறிய பகுதியிலிருந்து சுமார் 47 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீர் கேட்டில் இறக்கி விட்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் அருகிலிருந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இது குறித்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் இருவரையும் திருமார்பூர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து கைது செய்தனர். உத்தரபிரதேச மாநில நம்பர் பிளேட் கொண்ட அந்த ஸ்லீப்பர் பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.