தேசிய செய்திகள்

மராட்டியத்தில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலி: 22 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் காய்ச்சிய முக்கிய குற்றவாளி உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

புனே,

மராட்டிய மாநிலம் புனேயில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனே ஹடப்சர் பகுதியில் உள்ள பந்தாரே மாலா பகுதியில் 4 பேரும். பிம்ப்ரி சிஞ்ச்வாட்டில் உள்ள புகேவாடியில் 10 பேரும் கள்ளச்சாராயம் குடித்து பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளச்சாராயம் காய்ச்சிய முக்கிய குற்றவாளி உள்பட 8 பேரை அதிரடியாக கைது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கை மாநில குற்ற புலனாய்வு துறை விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

22 அதிகாரிகள் பணி இடைநீக்கம்

இந்தநிலையில், தங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது அரசு அதிரடி நடவ டிக்கை எடுத்துள்ளது. இது குறித்து புனே போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவின்படி, ஹடப்சர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சஞ்சய் மோகலே. உதவி இன்ஸ்பெக்டர் ஹசினா சிகல்கர், சப்-இன்ஸ்பெக்டர் ஹசன் முலானி ஆகி யோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதேபோல், டாபோடி போலீஸ் நிலையத்தை சேர்ந்த ஒரு சீனியர் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் என பிம்ப்ரி-சிஞ்ச்வாட் போலீஸ் துறையை சேர்ந்த 6 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மாநில கலால் துறையை சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 ஊழியர்கள் என மொத்தம் 13 பேரை பணி இடைநீக்கம் செய்து கலால் துறை கண்காணிப்பாளர் அதுல் கனடே உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் ஒரே நாளில் 22 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மராட்டிய போலீஸ் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.