புதுடெல்லி
நாடு முழுவதும் 2026-ம் ஆண்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் மார்ச் 15-ந்தேதி வரை போலீஸ் காவலில் மரணம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களை நா மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது. இதன்படி, நடப்பாண்டில் 170 பேர் போலீஸ் காவலில் மரணம் அடைந்துள்ளனர். மாநில அளவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் திரட்டி வைத்திருந்த தகவல்களை பெற்று அதன் அடிப்படையில் இந்த விவரங்கள் பகிரப்பட்டு உள்ளன.
இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதன்படி, 2024-25 ஆண்டில் இந்த எண்ணிக்கை 140 ஆக இருந்தது. 2023-24 ஆண்டில் 157 ஆகவும், 2022-23 ஆண்டில் 163 ஆகவும், 2021-22 ஆண்டில் 176 ஆகவும் இருந்தது. மாநில வரிசையில், முதல் இடத்தில் பீகார் உள்ளது. போலீஸ் காவலில் பீகாரில் 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் ராஜஸ்தான் (18) மற்றும் உத்தர பிரதேசம் (15) முறையே 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் உள்ளன. இதற்கடுத்து பஞ்சாப், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் தலா 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
தென்மாநிலங்களில் தமிழகம் (7), தெலுங்கானா (5) ஆகியவை முதல் மற்றும் 2-ம் இடங்களிலும், கர்நாடகா மற்றும் கேரளம் தலா 3 என்ற எண்ணிக்கையையும் கொண்டுள்ளன. கிழக்கு இந்தியாவில் ஒடிசா (9), மேற்கு வங்காளம் (7) மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அசாம் (5), அருணாசல பிரதேசம் (3) ஆகியவை உள்ளன.
எனினும், மிசோரம், சிக்கிம் போன்ற சிறிய மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் போலீஸ் காவலின்போது மரணம் எதுவும் பதிவாகவில்லை என அந்த தகவல் தெரிவிக்கின்றது.