அமெரிக்காவில் இருந்து இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இந்திய அரசு அமெரிக்காவுடன் குடியேற்றம் மற்றும் மக்கள் போக்குவரத்து தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கிறது. நாடு கடத்தல் விவகாரங்களிலும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
வெளிநாடுகளில் இருந்து ஒருவரை நாடு கடத்துவது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து தகவல் கிடைத்ததும், சம்பந்தப்பட்ட நபரின் தேசியத்தன்மையை இந்திய அரசு முதலில் சரிபார்க்கும். அதன் பின்னரே அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும்.அந்த வகையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை அமெரிக்காவில் இருந்து 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஜூலை மாதம் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 2025-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இருந்து 4,840-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.