கோஹிமா,
நாகாலாந்தில் கள்ளச்சாராயம் குடித்த 19 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கடந்த 1990-ம் ஆண்டில் இருந்து மது விலக்கு அமலில் உள்ளது. இதற்கிடையே, நாகாலாந்தில் மோகோக்சுங், டியுன்சாங் ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் புழங்கத் தொடங்கியது. அங்கு கள்ளச்சாராயம் குடித்த சிலர், மயக்கம், கண்பார்வை மங்குதல்,வாந்தி, பேதி போன்ற உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டனர்.
அவர்களில் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மோகோக்சுங் மாவட்டத்தில் 8 பேரும், டியுன்சாங் மாவட்டத்தில் 11 பேரும் கடந்த 2 நாட்களில் பலியானார்கள்.
அவர்களின் மரணத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த அவர்களது மாதிரிகள் தடயவியல் பரிசோதனைக்காக அசாம் தலைநகர் கவுகாத் திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். 19 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பங்லாங் சாங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் எங்கிருந்து வந்தது, எப்படி வினியோகிக்கப்பட்டது என்றும் அக்குழு கண்டுபிடிக்கும்.
தங்களுக்கு முக்கிய துப்பு கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், லேபிள் ஒட்டப்படாத மற்றும் கள்ளச்சாராயம் என சந்தேகம் உள்ள மதுபானத்தை குடிக்க வேண்டாம் என்றும், மது அருந்திய பிறகு தலை சுற்றல், கண்பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.