தேசிய செய்திகள்

ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி; ரீல்ஸ் வீடியோ எடுத்தபோது விபரீதம்

நீண்ட நேரமாக நடந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 2 இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே கர்தாஹரி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சுமார் 7 பேர், அங்குள்ள ரப்தி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் ஆற்றில் நீச்சலடித்தபடி தங்கள் செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

அவர்களில் ஒருவர் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அவர் நீச்சலடிக்க முடியாமல் தத்தளித்து அலறி கூச்சலிட்டபோது, அவரை காப்பாற்றுவதற்காக மற்றொரு இளைஞரும் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் 2 இளைஞர்களும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

அவர்களை காப்பாற்ற அங்கிருந்தவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இது குறித்து தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரமாக நடத்திய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 2 இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.