தேசிய செய்திகள்

2026-ம் ஆண்டுக்கான டெல்லி சர்வதேச திரைப்பட விழா துவக்கம்

சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

புதுடெல்லி

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2026-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா துவக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முதல்-மந்திரி ரேகா குப்தா, நடிகைகள் ஹேமா மாலினி, ஷர்மிளா தாகூர், கங்கனா ரணாவத் மற்றும் டெல்லி மந்திரிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி அவர்கள் துவக்கி வைத்தனர். பிரமாண்ட நிகழ்ச்சியாக நடத்தப்படும் இந்த விழாவில், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த திரைப்படங்களும் திரையிடப்படும்.

இந்த சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை 7 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். இதில் பல்வேறு வகையான மற்றும் பல்வேறு மொழிகளின் படங்களும் திரையிடப்பட உள்ளன. டெல்லியில் உள்ள மக்கள் அவற்றை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்த விழா அமையும்.

டெல்லியில் முதன்முறையாக இந்த சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது என டெல்லி மந்திரி மன்ஜிந்தர் சிங் கூறினார். டெல்லிக்கு இது ஒரு பெரிய தொடக்கம். திரை துறையின் பணிகள் டெல்லியிலும் நடைபெறும் என்ற வகையிலும், இந்த மிக பெரிய தொழில் டெல்லியுடன் பிணைக்கப்பட்டு உள்ளது என்ற கருத்துரு அடிப்படையிலும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று அவர் கூறினார்.