புதுடெல்லி
டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் சமீபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 21 பேர் பலியானார்கள். 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் ஆவர்.
டெல்லியில் விவேக் விஹார் மற்றும் பாலம் ஆகிய பகுதிகளில் தலா 9 பேர் தீ விபத்தில் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆண்டின் முதல் பாதியில் 65 பேர் வரை பலியாகி உள்ளனர். நாட்டின் தலைநகர் டெல்லியில் இதுபோன்று விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
டெல்லியில் 2019 முதல் 2026 மார்ச் வரையிலான 8 ஆண்டுகளில் தீ விபத்துகளில் 543 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் டெல்லி அரசு வெளியிட்டு உள்ளது. இந்த தீ விபத்துகளில் 2019-ம் ஆண்டில் அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்ததே அதிக அளவாகும். அதற்கு முன், 1997-ம் ஆண்டில் உபஹார் பகுதியில் தீ விபத்தில் 59 பேர் உயிரிழந்ததே அதிக அளவாக இருந்தது.
இதேபோன்று, 2019-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை தீ விபத்துகளில் சிக்கி 4,403 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
டெல்லி நகர் முழுவதும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்-மந்திரி ரேகா குப்தா உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில் டெல்லி அரசு தீவிர கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பூஜ்ய சகிப்புதன்மை கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து தள்ளுவது, சட்டவிரோத சொத்துகளுக்கு சீல் வைப்பது மற்றும் விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு நோட்டீஸ் பிறப்பிப்பது உள்ளிட்ட பல்வேறு ந பெரிய அளவில் அரசு முகமைகள் எடுத்து வருகின்றன.
பொதுமக்களின் பாதுகாப்பு அல்லது சொத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள், தீ பாதுகாப்பு விதிமீறல்கள், ஆக்கிரமிப்புகள் போன்றவை நடைபெறாமல் தடுக்கும் வகையில் நீண்டகால திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.