மற்றொரு கொடூரம்
மும்பை சாக்கிநாக்கா பகுதியில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவு சாலையோரம் வசிக்கும் 32 வயது இளம்பெண் கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இதில், படுகாயமடைந்த பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். டெல்லி நிர்பயா கற்பழிப்பு போன்ற இந்த பயங்கர சம்பவத்தில் மோகன் சவுகான் என்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் தானே மாவட்டத்தில் 15 வயது சிறுமியை 33 பேர் கற்பழித்த கொடூரம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி சமீபத்தில் டோம்பிவிலி மான்பாடா போலீசில் புகார் அளித்து உள்ளார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தான் சிறுமிக்கு ஏற்பட்ட பெருந்துயரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
8 மாதமாக பலாத்காரம்
சிறுமியை கடந்த ஜனவரி மாதம் அவரது காதலன் கற்பழித்தார். அப்போது அவர் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து உள்ளார். பின்னர் அவர் அந்த படத்தை வைத்து சிறுமியை மிரட்டி உள்ளார். மேலும், அவர் சிறுமியை தனது நண்பர்கள், கூட்டாளிகளுக்கு விருந்தாக்கி இருக்கிறார். சிறுமியை அவரது காதலனின் நண்பர்கள், கூட்டாளிகள் உள்பட 33 பேர் டோம்பிவிலி, பத்லாப்பூர், முர்பாட், ரபாலே உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று 4 முதல் 5 முறை கூட்டு பலாத்காரம் செய்து உள்ளனர். 8 மாதங்களாக இந்த பலாத்காரம் நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவலின்பேரில் போலீசார் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் 2 மைனர் வாலிபர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சிறப்பு குழு விசாரணை
சிறுமி கூட்டு பலாத்கார சம்பவம் குறித்து விசாரணை நடத்த உதவி கமிஷனர் சோனாலி தோலே தலைமையில் சிறப்பு புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி நலமாக இருப்பதாகவும் கூடுதல் போலீஸ் கமிஷனர் தத்தாரே காரலே கூறினார். 15 வயது சிறுமி கும்பலால் 8 மாதங்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.