புதுடெல்லி
மேற்காசியாவில் இதுவரை நடந்துள்ள மோதலில் 23 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான தொடர் மோதலால் அந்த பகுதியில் பதற்றம் நீடிப்பதுடன், கப்பல் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில், சரக்கு போக்குவரத்து கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன், கப்பலில் உள்ள பணியாளர்கள் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. இதில், இந்தியர்களும் அடங்குவர்.
இந்நிலையில், மேற்காசிய மோதல் தொடர்பான கேள்விக்கு, மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இன்று நிருபர்களிடம் பதிலளித்து உள்ளார்.
அவர் கூறும்போது, கருங்கடலில் வர்த்தக கப்பல்கள் மீது நடந்த தாக்குதல்களில் இதுவரை 5 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 2 பேரை காணவில்லை என்றார்.
இதேபோன்று, மேற்காசிய மோதலில் இதுவரை 23 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 15 பேர் கப்பல் ஊழியர்கள் ஆவர் என தெரிவித்து உள்ளார்.
ஓமன் கடலோர பகுதியில் பயணித்த வர்த்தக கப்பல் மீது நடந்த தாக்குதலில், இந்திய கப்பல் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார். கடல்சார் பயணத்தில் அமைதியையும், பாதுகாப்பையும் மீட்டெடுக்கவும், பதற்றங்களை தணிக்கவும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர முறைகளை கையாளும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த சூழலில், கப்பல் மீது நடந்துள்ள தாக்குதலில், இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலியானார். அவர், குஜராத் மாநிலத்தின் கந்தர் நஹீம் அஜிஜ் என அடையாளம் காணப்பட்டார். 14 பேரில், மீதமிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என அவர் கூறினார். உயிரிழந்த நஹீமின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறோம். அதற்காக விரைவாக செயல்பட்ட ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.