திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் சபரிமலை பக்தர்களுக்காக பம்பையில் 24 மணி நேர மருத்துவக் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்களின் அவசர மருத்துவத் தேவைகளுக்காக பம்பையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவக் கட்டுப்பாட்டு அறையைக் கேரள சுகாதாரத் துறை திறந்துள்ளது.
பம்பை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தை மையமாகக் கொண்டு இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படத் தொடங்கியுள்ளது. சபரிமலை யாத்திரைக் காலமான நவம்பர் 15 முதல் வரும் ஜனவரி 21-ம் தேதி வரை இந்த மருத்துவ சேவைகள் தடையின்றி 24 மணி நேரமும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில், கட்டுப்பாட்டு அறையில் பல மொழிகள் பேசும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ உதவி தேவைப்படும் பக்தர்கள் 04735 203232 என்ற தொலைபேசி எண்ணில் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்.
சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பாரம்பரியப் பாதைகளில் உள்ள மருத்துவ நிலையங்களில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மலையேறும் போது பக்தர்களுக்கு ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உடனடி முதலுதவி அளிக்கவும், மேல் சிகிச்சைக்காக அவர்களைப் பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லவும் பிரத்யேக ஆம்புலன்ஸ் மற்றும் ஸ்ட்ரெச்சர் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.