தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல் பணியில் 25 லட்சம் அதிகாரிகள்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 17.4 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர்.

புதுடெல்லி

நாட்டில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் கடந்த 15-ந்தேதி அறிவித்தது.

இதில், மே மாதம் 10-ந் தேதியுடன் தமிழக அரசின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதேபோன்று, ஜூன் 15-ந்தேதி புதுச்சேரி, மே 7-ந்தேதி மேற்கு வங்காளம் மே 20-ந்தேதி அசாம், மே 23-ந்தேதி கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. மேற்கு வங்காளம் தவிர பிற 4 மாநிலங்களுக்கும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும். இதேபோன்று, அனைத்து 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஒரே நாளில் (மே 4-ந்தேதி) நடைபெற உள்ளது.

5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் மொத்தம் 17.4 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். வன்முறை, கலவரம் இன்றி சுமுகத்துடன் தேர்தல் நடைபெறுவதற்காக, 70 வாக்காளர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்தல் அதிகாரி பணியமர்த்தப்படுவார்.

வாக்காளர்கள் அச்சமின்றி தங்கள் கடமையை நிறைவேற்ற, முற்றிலும் பாரபட்சமின்றி செயல்படும்படி தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் குறிப்பிட்டு உள்ளார்.

5 மாநில தேர்தல் பணியில் ஒட்டுமொத்தத்தில் 25 லட்சம் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். அவர்களில் 15 லட்சம் பேர் தேர்தல் அதிகாரிகள் ஆவர். 8.5 லட்சம் பாதுகாப்பு படையினரும், 40 ஆயிரம் வாக்கு எண்ணிக்கை அதிகாரிகளும் பணியாற்றுவார்கள். 49 ஆயிரம் பேர் தேர்தல் கண்காணிப்பாளராகவும், 21 ஆயிரம் பேர் தேர்தல் பிரிவு அதிகாரிகளாகவும் , 15 ஆயிரம் பேர் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும் மற்றும் பிற அதிகாரிகளும் பணியில் ஈடுபடுவார்கள்.