நவிமும்பை
பாகிஸ்தானில் இருந்து 25 டன் தர்பூசணி விதைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில், தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
மராட்டியத்தின் நவிமும்பை நகரில் உள்ள நவாசேவா துறைமுகத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சந்தேகத்திற்குரிய கன்டெய்னர் ஒன்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து முலாம்பழம் விதைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும், அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து சோதித்தபோது, முலாம்பழ விதைகளுக்கு பதிலாக இந்தியாவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 25 டன் தர்பூசணி விதைகள் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் கடத்தல் பின்னணி குறித்து அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த விதைகள் முதலில் பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு இருந்து இந்தியாவிற்குள் நுழைப்பதற்காக வேறு கன்டெய்னர்களுக்கு மாற்றப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் நவிமும்பைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த முறைகேடான வர்த்தகத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், நவிமும்பையை சேர்ந்த தந்தை, மகன் இணைந்து, சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்த தர்பூசணி விதைகளை கடத்தி வந்து இந்தியாவில் விற்க முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து. சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட அந்த 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.