புதுடெல்லி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.
இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் திறந்து விடுகிறோம் என அறிவித்தது. எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தானில் 21 மணிநேரம் நீடித்த தொடக்க கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.
இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தேங்கியுள்ள இந்திய கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன், பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைகின்றன. இந்த நிலையில், இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் இயக்குநர் மன்தீப் சிங் ரந்தவா நிருபர்களிடம் இன்று பேசினார்.
அவர் கூறும்போது, கடந்த 24 மணிநேரத்தில் 25 தொலைபேசி அழைப்புகளும், 135 இ-மெயில்களும் வந்துள்ளன. இதுவரை மொத்தம் 6,918 தொலைபேசி அழைப்புகளையும், 14,605 இ-மெயில்களையும் கையாண்டிருக்கிறோம். இதுவரை 2,563 இந்திய கப்பல் ஊழியர்களை பாதுகாப்பாக சொந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.
அவர்களில் வளைகுடா நாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 25 ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறினார். இந்திய கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பே எப்போதும் உச்சபட்ச முன்னுரிமையாக இருக்கும். நிலைமையை தொடர்ச்சியாக அமைச்சகம் கண்காணித்து வருகிறது. சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவோம் என அப்போது உறுதி கூறினார்.
இந்திய கொடியுடன் கூடிய தேஷ் கரீமா என்ற கப்பல், 97 ஆயிரத்து 422 டன் கச்சா எண்ணெய்யுடன், 31 இந்திய கப்பல் ஊழியர்களுடன் ஹார்மூஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து விட்டது. அது நாளை மும்பைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.