ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பலாமு மாவட்டக் குழந்தை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு சிறுவர்கள் சிலர் பீகாருக்கு கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, பட்வா பகுதியில் சென்ற ஒரு வாகனத்தில் இருந்து 14 சிறுமிகள் உள்பட மொத்தம் 27 சிறுவர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட 12 முதல் 16 வயதுடைய சிறுவர்கள் அனைவரும் நெல் நடும் பணிக்காக கூலி தொழிலாளர்களாக பீகாருக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
மீட்கப்பட்ட சிறுவர், சிறுமிகள் உடனடியாக அங்குள்ள சிறுவர் சீர்திருத்தக் காப்பகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.