கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் 4 மாதங்களில் 27 புலிகள் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டில் இதுவரை 27 புலிகள் உயிரிழந்துள்ளன.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் 9 புலிகள் காப்பகங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவிலேயே அதிக எண்ணிகையிலான 785 புலிகள் அங்கு இருந்தன. சமீப காலங்களில் இங்கு அதிக எண்ணிக்கையிலான புலிகள் உயிரிழந்து உள்ளன.

இந்த ஆண்டின் முதல் புலி மரணம் கடந்த ஜனவரி 7-ந்தேதி பந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் பதிவானது. தற்போது கன்ஹா புலிகள் காப்பகத்தில் 10 வயது பெண் புலியும், 18 மாத குட்டியும் உயிரிழந்தன. இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளன.

இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர் அஜய் துபே கூறும்போது, "புலிகள் காப்பகங்களின் வனக்காவலர்கள் பெரும்பாலும் தொலைதூர பெருநகரங்களில் வசிப்பதால் களத்தில் கண்காணிப்பு இல்லை. காப்பகங்களை சுற்றி உள்ள கிராமவாசிகள் மருத்துவ இலைகளை சேகரிப்பதற்காக தங்கள் நாய்களை சட்ட விரோதமாக புலிகள் காப்பகங்களுக்கு அழைத்து செல்வதால் புலிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் புலிகள் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கின்றன” என்றார்.