பாக்பத்,
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் அரசு வேலை பெற வேண்டும் என்ற தனது பல ஆண்டு கனவை, 59 வயதில் தனது மகளுடன் சேர்ந்து நனவாக்கி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தின் பத்வாட் கிராமத்தை சேர்ந்தவர் விஜய்குமார் சர்மா. இவருக்கு தற்போது 59 வயதாகிறது. மறைந்த இவரது தந்தை லட்சுமண் சிங் ஒரு அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றியவர். தந்தையை போலவே தானும் அரசு ஆசிரியராக வேண்டும் என்ற கனவோடு, கடந்த 1999-ம் ஆண்டு முதல் அதாவது 27 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தேர்வுகளை எழுதி வந்தார்.
பரோட் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 26 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி கொண்டே, ஓய்வு நேரங்களில் தீவிரமாக படித்து வந்தார். சமயங்களில் சில மாதிரி வினாத்தாள்களுக்கு சரியான நேரத்தில் விடை அளிக்கும் வரை உணவை கூட தவிர்த்து கடுமையாக உழைத்துள்ளார்.
இந்த நீண்ட போராட்டத்தின் பலனாக, உத்தர பிரதேச அரசு நடத்திய பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெற்றி பெற்று சமஸ்கிருத ஆசிரியராக தேர்வாகி உள்ளார். இவருடன் சேர்ந்து தேர்வு எழுதிய அவரது 28 வயது மகள் மம்தாவும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். 5 பிள்ளைகளுக்கு தந்தையான விஜய்குமார் சர்மா, லக்னோவில் நடைபெற்ற விழாவில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடமிருந்து பணிநியமன ஆணையை பெற்றுக்கொண்டார்.
இவர் விரைவில் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அய்லம் இடைநிலைக் கல்லூரியில் பணியில் இணைய உள்ளார். இவரது மகன்கள் உத்தரபிரதேச காவல்துறையில் பணியாற்றி வரும் நிலையில், தேர்ச்சி பெற்ற மகள் மம்தாவின் பெயர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.
கடந்த காலங்களில் முதுகலை ஆசிரியர் தேர்வில் 4 முறையும், பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 6 முறையும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், நேர்காணல் சுற்றில் இவருக்கு வாய்ப்பு கைநழுவிப்போனது. இருப்பினும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தவருக்கு, இந்த முறை நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டது பெரும் வாய்ப்பாக அமைந்தது.
1967-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிறந்த விஜய்குமார் சர்மாவுக்கு, அரசு விதிகளின்படி 62 வயதில் ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் மட்டுமே சேவைக்காலம் உள்ளது. இருப்பினும், இத்தனை ஆண்டு கால உழைப்புக்கு கிடைத்த இந்த வெற்றி, தனது குடும்பத்திற்கும் தந்தை வழியில் வந்த கனவிற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.