தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் அரிய வகை பூனையை கொன்று எரித்த 3 பேர் கைது: வீடியோவால் சிக்கினர்

ராஜஸ்தானின் சில பகுதிகளில் மட்டுமே மிக சிறிய எண்ணிக்கையில், இந்த அரிய வகை பூனைகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மேர் மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஷாகர் பகுதியை சேர்ந்த இப்ராகிம் கான் (32), உமா (31) மற்றும் சலிதாத் (50)அவர்கள் தங்களின்வாழ்வாதாரத்திற்காக ஆடு மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

இதனிடையே அவர்களின் கால்நடைகளை தொடர்ந்து ஒரு மர்ம மிருகம் தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அந்த மர்ம மிருகத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டு பலியாகும் ஆடு, மாடுகள் மற்றும் தங்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி அவர்கள் கவலை பட தொடங்கினர். அந்த மர்ம மிருகத்தைக் கண்டுபிடித்து தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்கள் அந்த மிருகத்தின் கால் தடங்களை பின் தொடர்ந்த சென்றனர். அப்போது அந்த மிருகத்தை கண்ட அவர்கள் அதை விரட்டி பிடிக்க முயன்ற போது அது எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த மிருகத்தை எரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து வன அதிகாரிகள் தலைமையிலான இரண்டு குழுக்கள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஷாகர் பகுதியில் உள்ள மணல் குன்றுகளில் புதைக்கப்பட்டிருந்த, பாதி எரிந்த நிலையில் இருந்த மிருகம் காரக்கால் பூனை என்று தெரிய வந்தது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் மட்டுமே மிக சிறிய எண்ணிக்கையில், இந்த அரிய வகை பூனைகள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.