பரிதாபாத்,
நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள், தலித் மக்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினாலும் இச்சம்பவங்கள் தொடர் கதையாகதான் உள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் 13-ம் தேதி இறைச்சி கடையிலிருந்து இறைச்சியை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் ஆசாத் மற்றும் அவருடைய நண்பர்களை ஒரு கும்பல் தாக்கி உள்ளது. இறைச்சி கடைக்காரரிடம் வாடகைக்கு ஆட்டோ ஓட்டும் ஆசாத் இருவர் வழி மறுத்து உள்ளனர்.. மாட்டிறைச்சி கடத்துகிறாரா? என்று கூறி அவருடன் தகராறு செய்து உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஆசாத் காவல் நிலையம் செல்வோம், சோதனை செய்யலாம் என்று கூறிஉள்ளார். இதனையடுத்து 2 பேரும் செல்போனில் சிலரை வரவழைத்து உள்ளனர். அங்கு கும்பலாக கூடிய அவர்கள் ஆசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் நான்கு பேரை தாக்கி உள்ளனர்.
இதற்கிடையே அங்கு வந்த போலீசைப் பார்த்ததும் கும்பல் தப்பி ஓடிவிட்டது. காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 20 பேர் வரையில் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கும்பல் தங்களிடம் தகாத முறையில் நடந்ததும் ஆசாத் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார், இதனையடுத்தே கும்பல் அவர்களை அடித்து உள்ளது. முதல்கட்ட விசாரணையில் ஆட்டோவில் ஏற்றி சென்றது எருமை இறைச்சி என்றும் அது பசு இறைச்சி இல்லை என்றும் தெரியவந்து உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. ஆசாத் அளித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது, மேலும் இறைச்சியை பரிசோதனை கூடத்திற்கும் அனுப்பி உள்ளது போலீஸ்.