நெல்லூர் கோவில், ராஜநாகங்கள் 
தேசிய செய்திகள்

சிவலிங்கத்தை சுற்றிய 3 ராஜநாகங்கள்: நெல்லூர் கோவிலில் பக்தர்கள் பரவசம்!

கடந்த ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு ஒரு நாகப்பாம்பு சிவலிங்கத்தை வலம் வந்தது.

ராஜமகேந்திரவரம்,

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றில், சிவலிங்கத்தை மூன்று ராஜநாகங்கள் சுற்றி வலம் வந்த அரிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

சிவலிங்கத்தை சுற்றிய பாம்புகள்

நெல்லூர் மாவட்டம் மனுபோலு பி.சி. காலனி அருகே ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று காலை வழக்கம்போல பக்தர்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கோவிலுக்குள் புகுந்த மூன்று நாகப்பாம்புகள், கருவறையில் இருந்த சிவலிங்கத்தை நோக்கிச் சென்றன.

புற்றிற்குள் சென்று மறைந்தன

அங்கு சிவலிங்கத்தை ஒன்றாக சுற்றி வலம் வந்த அந்த பாம்புகள், சிறிது நேரம் அங்கேயே படுத்திருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், பின்னர் அது சிவபெருமானின் லீலை என உணர்ந்து ஆச்சரியமடைந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு, அந்த மூன்று பாம்புகளும் அமைதியாக கோவிலுக்குள்ளேயே இருந்த புற்றிற்குள் சென்று மறைந்தன.

வைரலாகும் வீடியோ

இந்த அரிய காட்சியை அங்கிருந்த பக்தர்கள் தங்களது கைபேசிகளில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள், இந்த அதிசய நிகழ்வை காண கோவிலில் பெருமளவில் திரண்டனர். சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமையன்று, கருவறையில் மூன்று நாகப்பாம்புகள் ஒன்றாகக் காணப்பட்டது ஒரு தெய்வீக அறிகுறி என்று கூறி பக்தர்கள் கற்பூர ஆராதனை காட்டி வழிபட்டனர்.

இது முதல் முறையல்ல

இந்தக் கோவிலில் நாகப்பாம்புகள் காணப்படுவது இது முதல் முறையல்ல என்று உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகு ஒரு நாகப்பாம்பு சிவலிங்கத்தை வலம் வந்தது. அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாக சதுர்த்தி அன்றும், சிவலிங்கத்தின் அருகே இரண்டு நாகப்பாம்புகள் தோன்றி பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.

இங்கு நாகப்பாம்புகள் அடிக்கடி தென்படுவது இந்த திருத்தலத்தின் ஒரு தனிச்சிறப்பு மற்றும் ஆன்மீக மகிமை என்று உள்ளூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT