தேசிய செய்திகள்

3 ஆண்டு சேமிப்பு.. ஸ்கூட்டர் வாங்க 12,300 நாணயங்களுடன் ஷோரூம் வந்த நபர்

ஸ்கூட்டருக்கான தொகை முழுவதும் 10 ரூபாய் நாணயங்களாகவே செலுத்தினார்.

ஐதராபாத்,

தெலங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர், 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு 1.23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கியுள்ளார்.

சேமிப்புப் பழக்கம்

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி ஜோசப் (51). மதபோதகரான இவர், 10 ரூபாய் நாணயங்களை கடந்த 3 ஆண்டுகளாகச் சேமித்து வந்துள்ளார். 10 ரூபாய் நாணயங்கள் செல்லாததாகிவிடும் அல்லது புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுவிடும் என்ற வதந்திகளால், அவரது குடும்பத்தினர் இந்த நாணயங்களைச் சேமிக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். இருப்பினும், அவர் தனது சேமிப்புப் பழக்கத்தைக் கைவிடாமல் தொடர்ந்து நாணயங்களைச் சேமித்து வந்தார். இந்த சேமிப்பு பணத்தை கொண்டு பயனுள்ள பொருள் ஒன்றை வாங்க வேண்டும் என திட்டமிட்டு வந்துள்ளார்.

10 ரூபாய் நாணயங்கள்

இந்த நிலையில், தான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ஸ்கூட்டர் ஒன்றை வாங்க ரவி ஜோசப் முடிவெடுத்தார். ஸ்கூட்டருக்கான கட்டணமாக நாணயங்களை ஏற்றுக்கொள்வார்களா என்பதை அறிய, 15 நாட்களுக்கு முன்பு ரவி ஜோசப் ஷோரூமிற்கு சென்று விசாரித்துள்ளார். நாணயங்களை ஏற்றுக்கொள்ள ஷோரூம் மேலாளர் தெரிவித்ததை தொடர்ந்து, அவர் தான் சேமித்து வைத்திருந்த நாணயங்களை மூட்டை கட்டிக்கொண்டு ஷோரூமிற்கு எடுத்துச்சென்றார்.

2 மணி நேரம் எண்ணப்பட்ட நாணயங்கள்

இதன் பின்னர், ரூ.1.23 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டரை ரவி ஜோசப் வாங்கினார். ஸ்கூட்டருக்கான தொகை முழுவதும் 10 ரூபாய் நாணயங்களாகவே அவர் செலுத்தினார். அதாவது, 10 ரூபாய் நாணயங்கள் 12,300-ஐ ஷோரூமில் செலுத்தி ஸ்கூட்டரை பெற்றுக்கொண்டார். ஷோரூம் ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து அந்த நாணயங்களை எண்ணி முடிக்கப் கிட்டத்தட்ட 2 மணி நேரம் எடுத்துக்கொண்டனர். ரவி ஜோசப்பின் விடாமுயற்சியும், சிறுசேமிப்புப் பழக்கமும் சமூக ஊடகங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT