கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

பிலிப்பைன்சில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

புதுடெல்லி,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சின் மின்டானோ பகுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 முறை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் மளமளவென சரிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 37 சதவீத கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

பிலிப்பைன்சின் மின்டானோவில் இன்று நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பேரழிவுகள் குறித்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிலிப்பைன்ஸ் மக்கள் மற்றும் அரசுக்கு இந்தியா உறுதுணையாக நிற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.