மருந்து மாதிரிகள்  
தேசிய செய்திகள்

330 மருந்து மாதிரிகள் தரமற்றவை: மத்திய சுகாதார அமைச்சகம் அதிரடி அறிக்கை!

தரமற்ற மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் இந்தியாவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளன.

மத்திய- மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தைக் கண்காணிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியங்கள் நாடு முழுவதும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டன. மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் உற்பத்தி அலகுகளில் இருந்து சீரற்ற முறையில் சேகரிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வக சோதனைகளின் முடிவில், நாடு முழுவதும் மொத்தம் 330 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டுள்ளது.

ஆய்வக வாரியான விவரங்கள்

மத்திய மருந்து ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டதில் 42 மருந்து மாதிரிகள் தரமற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசு மருந்து ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 288 மருந்து மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) நடத்திய இந்த வழக்கமான மாதாந்திர கண்காணிப்பு சோதனையின் மூலம் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அரசு நடவடிக்கை

சமீபத்திய சோதனைகளின்படி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மருந்து மாதிரிகள் இதில் கணிசமான அளவில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இந்த தரமற்ற மருந்துகளைத் தயாரித்த நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

SCROLL FOR NEXT