புதுடெல்லி
தகவல் ஆணையங்களில் 3.85 லட்சம் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன என அறிக்கை தெரிவிக்கின்றது.
நாட்டில் 28 தகவல் ஆணையங்களில் 3.85 லட்சம் மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன என தகவல் தெரிய வந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டம் நடைமுறைக்கு வந்து கடந்த 12-ந்தேதியுடன் 21 ஆண்டுகள் முடிவடைந்தன.
இதனையொட்டி, சதார்க் நக்ரிக் சங்கதன் என்ற கண்காணிப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூன் 30-ந்தேதிப்படி, 28 தகவல் ஆணையங்களில் 3 லட்சத்து 85 ஆயிரம் மேல்முறையீடுகள் மற்றும் புகார்கள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 9 தகவல் ஆணையங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை 37 ஆயிரத்து 701 வழக்குகளை, உத்தரவு பிறப்பிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதில், மத்திய தகவல் ஆணையம் 14,603 வழக்குகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து, மராட்டியம், பீகார் மற்றும் குஜராத் ஆகியவை உள்ளன. 5 ஆணையங்கள் மேல்முறையீடுகள் மற்றும் திருப்பி அனுப்பப்பட்ட புகார்கள் உள்ளிட்ட விவரங்களை வழங்கவில்லை என தெரிய வந்துள்ளது.