பெங்களூரு,
ராமநகர் அருகே தனியார் பள்ளி கழிவறையில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டம் கனகபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வழக்கம்போல் மாணவி பள்ளிக்கு சென்றாள். பின்னர், இயற்கை உபாதை கழிப்பதற்காக பள்ளியில் இருந்த கழிவறைக்கு அந்த மாணவி சென்றாள். அப்போது, அங்கு கழிவறையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதில் பயந்த மாணவி சத்தம்போட முயன்றாள். அப்போது அந்த தூய்மை பணியாளர் மாணவியின் வாயை பொத்தியதுடன், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
பின்னர் அவர், அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். இதையடுத்து, அந்த மாணவி இதுகுறித்து அழுதுக்கொண்டே ஆசிரியரிடம் கூறினாள். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர், உடனே இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி அறிந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த தூய்மை பணியாளரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருவதும், தனது ஓய்வு நேரத்தில் தனியார் பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பகுதிநேர பணியை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.