தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்; தாய்-மகள் சாவு - 2 பேர் கவலைக்கிடம்

விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி பாட்டில் கிடந்தது.

கோட்டயம்,

வியாபாரி குடும்பம்

கேரளம் மாநிலம் கோட்டயம் அருகே உள்ள அய்யர்குன்னம் பகுதியை சேர்ந்தவர் ஜோபி செருபரத் (வயது 50), வியாபாரி. இவருடைய மனைவி ஜோத்ஸ்னா (40). இவர்களுக்கு மரியா தெரசா தாமஸ் (16) என்ற மகளும், ஆலன் (9) என்ற மகனும் இருந்தனர். இருவரும் அருகில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வியாபாரியின் குடும்பத்தினரை அவரது உறவினர் ஒருவர் செல்போனில் அழைத்துள்ளார். ஆனால் யாரும் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர், வியாபாரியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொருவருக்கு தகவல் கொடுத்தார்.

விஷம் குடித்தனர்

இதனை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர், வியாபாரி ஜோபி செருபரத் வீட்டில் சென்று பார்த்த போது கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை. இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது ஜோபி செருபரத் மற்றும் அவரது மனைவி, மகள், மகன் என 4 பேரும் வாயில் நுரை தள்ளியப்படி உயிருக்கு போராடியபடி கிடந்தனர். அவர்களின் அருகில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி பாட்டில் கிடந்தது. இதனால் 4 பேரும் விஷம் குடித்திருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

தாய்-மகள் சாவு

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி வியாபாரியின் மனைவி ஜோத்ஸ்னா, மகள் மரியா தெரசா தாமஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். ஜோபி செருபரத் மற்றும் ஆலன் ஆகியோ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வியாபாரி ஜோபி செருபரத் சீட்டு பணமாக ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தி ருந்ததாக தெரிகிறது. இந்த பணம் திரும்ப கிடைக்காததால் அவர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துள்ளனர். இதனால் குடும்பத்துடன் தற்கொலை முடிவை எடுத்தது தெரி யவந்தது. மேலும் இதுதொடர்பாக கோட்டயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.